Posted in

தந்தைக்கு ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர் பரிசளித்த திமுக எம்எல்ஏ: பெரம்பலூரில் நடந்த பிரம்மாண்டம்!

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் வேந்தரும், பிரபல தொழிலதிபருமான அ. சீனிவாசன் தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி பெரம்பலூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பிறந்தநாள் விழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக, தனது தந்தையை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை அவரது மகனும், எம்.எல்.ஏவுமான கதிரவன் பரிசாக அளித்துள்ளார்.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சர்க்கரை ஆலைகள் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்திவரும் முக்கியப் பெருநிறுவணமாகும். இத்தகைய பின்னணியைக் கொண்ட இந்தக் குடும்பத்தினர் நடத்திய இந்த ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டாட்டமும், ஹெலிகாப்டர் பரிசும் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பலரும் தந்தைக்கு மகன் செய்த இந்தச் சிறப்பான செயலைப் பார்த்து வியந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தந்தைக்கு ஹெலிகாப்டர் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு தொடர்பான தகவல்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அறியப்பட்ட இந்தக் குடும்பத்தினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.