அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில், கிரேக்கப் புராணக் கதாபாத்திரமான ‘அட்லஸ்’ (Atlas) பாணியில் உலக உருண்டையைத் தனது தோள்களில் சுமந்திருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு விசித்திரமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கக் கொடியை உடலில் போர்த்திக்கொண்டு, பிரம்மாண்டமான உலகத்தைத் தலைக்கு மேல் தூக்கி நிறுத்துவது போன்ற இந்தத் தோற்றம், இணையவாசிகளிடையே தற்பொழுது மாபெரும் விவாதத்தையும் வைரல் அலையையும் கிளப்பியுள்ளது. எந்தவித கேப்ஷனும் (Caption) இல்லாமல் டிரம்ப் இதனைப் பகிர்ந்துள்ளதால், இதன் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும் எனப் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் சார்ந்த நகர்வுகளுக்கு மத்தியிலேயே டிரம்ப் இந்த ஏஐ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஜி7 (G7) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பும் வழியிலும், ஈரான் உடனான அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரங்களுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து ட்ரூத் சோஷியல் தளத்தில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரப் பாரங்களை ஒட்டுமொத்தமாகத் தன் தோள்களில் சுமக்கும் ஒரு உலகளாவிய தலைவராகத் தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொள்ளும் நோங்கிலேயே அவர் அட்லஸ் உருவகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று அரசியல் வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப் இத்தகைய சர்ச்சைக்குரிய ஏஐ புகைப்படங்களையோ அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட மீம்களையோ (Memes) பகிர்வது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் நெப்போலியன், அலெக்சாண்டர் மற்றும் கெங்கிஸ் கான் போன்ற வரலாற்றுப் பேரரசர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பகிரப்பட்ட பதிவுகளை டிரம்ப் வரவேற்றிருந்தார். மேலும், சமீபத்தில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் தன்னைச் சித்தரித்த ஒரு ஏஐ புகைப்படத்தைப் பகிர்ந்து, பின்னர் பழமைவாதிகள் மற்றும் கிறிஸ்தவர்களிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அதனைத் தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகை அல்லது டிரம்பின் பிரச்சாரக் குழு தரப்பில் இருந்து இந்த அட்லஸ் புகைப்படத்திற்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி நெட்டிசன்கள் இதனை அமெரிக்காவை வழிநடத்தும் ஒரு ‘சூப்பர் ஹீரோ’ இமேஜாகக் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம், ஒரு நாட்டின் அதிபர் இத்தகைய நம்பகத்தன்மையற்ற ஏஐ புகைப்படங்களைத் தொடர்ந்து பகிர்வது பொதுமக்களிடையே அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும் என்று ஊடகவியலாளர்களும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.