Posted in

என் ஃப்ரெண்ட்ஸ் கூட இவ்வளவு வேகமாக ரிப்ளை பண்ண மாட்டாங்க – Chess.com-ஐ கலாய்த்த எலான் மஸ்க்: வைரலாகும் பதிவு

உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மாஸ்க், தனது சொந்தச் சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் (X) தளத்தில், பிரபல ‘Chess.com’ தளத்தின் நிர்வாகியுடன் செஸ் விளையாட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து நடத்திய காரசாரமான, அதேவேளையில் நகைச்சுவையான விவாதம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“எதிர்காலத்தில் உருவாகும் ‘சூப்பர் ஏஐ’ (ASI) தொழில் நுட்பமானது, செக்கர்ஸ் விளையாட்டைப் போலச் சதுரங்க விளையாட்டையும் (Chess) முழுமையாகக் கணித்துத் தீர்த்துவிடும்” என எலான் மாஸ்க் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த Chess.com பக்கம், “பிரபஞ்சத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை விடச் செஸ் விளையாட்டின் நகர்வுகள் அதிகம்; அதை ஏஐ-யால் கூட தீர்க்க முடியாது” எனக் கூறி “Skill Issue” என எலான் மாஸ்க்கைக் கிண்டல் செய்தது.

இதனால் கடுப்பான எலான் மாஸ்க், செஸ் நகர்வுகளின் கணிதப் புள்ளிவிவரங்களை அடுக்கி, “எந்தப் புகழ்பெற்ற செஸ் இணையதளத்தின் யாரோ ஒரு இன்டர்ன் (Intern) தம்பியுடன் நான் விவாதித்துக் கொண்டிருக்கிறேன்” என நக்கலாகப் பதிவிட்டார். அதற்கு உடனே பதிலளித்த Chess.com சமூக வலைத்தள நிர்வாகி, “நான் இன்டர்ன் இல்லை, முழு நேர ஊழியர் (Full-time employee)” எனக் கூறியதுடன், எலான் மாஸ்க்கின் நொடிக்கு நொடி பதிலும் வேகத்தைப் பார்த்து, “என்னோட சொந்த நண்பர்கள் கூட எனக்கு இவ்வளவு வேகமா மெசேஜிற்கு ரிப்ளை பண்ண மாட்டாங்க!” எனக் கிண்டலாகக் கமெண்ட் செய்தார்.

எலான் மாஸ்க்கின் பதிவுக்கு அந்த செஸ் நிர்வாகி நொடிப் பொழுதில் கொடுத்த இந்த லோக்கல் பாணி நக்கல் கமெண்ட் இணையத்தில் பெரும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது. தொழிலதிபர் மற்றும் உலகச் செல்வந்தரான எலான் மாஸ்க், ஒரு செஸ் சமூக வலைத்தள நிர்வாகியிடம் எக்ஸ் தளத்தில் வரிந்துகட்டிக்கொண்டு விவாதித்த இந்த சுவாரசியமான உரையாடல் மீம்ஸ்களாக மாற்றப்பட்டு எக்ஸ் தளத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.