பிரான்ஸ் நாடு முழுவதும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, கல்வி மற்றும் பொதுச் சேவைகளைக் கண்டித்துத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தப் பேரணிகள் சில இடங்களில் மோதல்களாகவும் வன்முறையாகவும் மாறியதுடன், கடைகள் சூறையாடப்பட்டுத் தீ வைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல் துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீடியும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த மற்றும் வன்முறையில் ஈடுபட்ட சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்தப் போராட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 60 பேர் காயமடைந்ததாகவும் அவர் உறுதிப்படுத்தினார். பொது நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பதாகப் பிரதமர் மற்றும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிபர் இம்மானுவேல் மெக்ரான் எச்சரித்துள்ளார். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்களைச் சில தீவிரக் குழுக்கள் தங்களது வன்முறைச் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.