Posted in

பிரான்சில் வெடித்த போராட்டம்: லூவ்ரே அருங்காட்சியகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

பிரான்ஸ் முழுவதும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் திரள் போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தின் பிரதான நுழைவாயிலை மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால், அங்குச் செயல்பாடு பாதிக்கப்பட்டது. கலைப் பள்ளி மாணவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் காரணமாக, உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பொதுமக்கள் மத்தியில் நிலவும் கடும் அதிருப்தியைக் கட்டுப்படுத்தத் திணறுகிவரும் உள்ளூர் நிர்வாகங்கள், சில பகுதிகளில் மாலை நேரங்களில் பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. பிரான்ஸ் முழுவதும் இதுவரை நடந்த மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏராளமான காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமான தீவிர இடதுசாரி குழுக்களை அரசு தரப்பு கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் இந்த நெருக்கடி நிலை குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.

பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பிரெஞ்சு அரசிற்கு எதிரான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.