சர்வதேச அளவில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், தங்களின் அவசர இருப்பிலிருந்து 10 கோடி பேரல் டீசல் மற்றும் கச்சா எண்ணெயை சந்தையில் வெளியிட ஜி7 (G7) நாடுகள் குழு சம்மதம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வலியுறுத்தல் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த முக்கிய கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA) ஒருங்கிணைப்பில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த எரிபொருள் கையிருப்பு படிப்படியாகச் சந்தைக்குக் கொண்டுவரப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்களின் இருப்பிலிருந்து எரிபொருளை உடனடியாக வெளியிடாவிட்டால், அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நடந்து வரும் போர்கள் மற்றும் உக்ரைன் மோதல்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
ஜி7 நாடுகளின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதளப் பக்கத்தில் வரவேற்றுப் பாராட்டியுள்ளார். இந்த கூட்டறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஃபியூச்சர்ஸ் விலைகளில் உடனடியாகச் சரிவு பதிவாகத் தொடங்கியுள்ளது.
அடுத்த 20 நாட்களுக்குள் கணிசமான அளவிலான டீசல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் கூடுதல் அவசர இருப்பை வெளியிடுவது குறித்து ஐஇஏ நாடுகள் ஆலோசனை நடத்தவுள்ளன.