கிரேக்க நாட்டைச் சேர்ந்த ரோட்ஸ் (Rhodes) தீவில் பெய்த கடும் பெருமழை மற்றும் புயல் காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தீவில் உள்ள பல சாலைகள் தண்ணீரில் மூழ்கியதுடன், அங்குள்ள கடற்கரைப் பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட பல வாகனங்களை வெள்ள நீர் அடித்துச் சென்றது.
இந்தச் சம்பவத்தில் ஸ்டெக்னா (Stegna) பகுதியில் தனது வாகனத்தை மீட்க முயன்ற 62 வயது மதிக்கத்தக்க ஹோட்டல் ஊழியர் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் திடீர் இயற்கை பேரிடர் காரணமாக ரோட்ஸ் தீவின் முக்கியச் சாலைகள் சேதமடைந்ததோடு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ள உள்ளூர் நிர்வாகம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடலில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும் கடலோரக் காவல்படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிரேக்கத்தின் பல பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடுகளிலும் கடுமையான புயல் மற்றும் மழைக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சேதமடைந்த உள்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.