Posted in

மனிதர்களால் தங்களின் ஆயுட்காலத்தைக் கணிக்க முடியுமா? – ஜப்பான் ஆய்வில் வெளியான ஆச்சரியத் தகவல்!

மனிதர்கள் தங்களின் வாழ்நாளை அல்லது இறக்கும் வயதை ஓரளவிற்குத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்றும், குறிப்பாக நீண்ட காலம் வாழ்வோம் என்று நம்புபவர்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிஜமாகிறது என்றும் ஜப்பானில் நடத்தப்பட்ட புதிய அறிவியல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஜப்பானின் சுகுபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷோஹேய் ஒகமோட்டோ தலைமையிலான குழுவினர், 60 வயதிற்கு மேற்பட்ட 2,400-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடையே சுமார் 28 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்திய நீண்டகால ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆய்வின் தொடக்கத்தில் பங்கேற்பாளர்களிடம் அவர்கள் எந்த வயது வரை வாழ்வார்கள் என்று கணிக்கக் கோரப்பட்டதில், பெரும்பாலானோர் தங்களின் உடல்நிலை மற்றும் குடும்பத்தின் ஆயுட்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர். இதில், நீண்ட காலம் வாழ்வேன் என்று நேர்மறையாகக் கணித்தவர்கள், தங்களின் கணிப்பிற்கு ஏற்பவே அதிக ஆண்டுகள் வாழ்ந்து காட்டியுள்ளனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் உயர்கல்வி கற்றவர்கள் தங்களின் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலத்தை விடவும் கூடுதல் ஆண்டுகள் வாழ்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளையில், தங்களால் நீண்ட காலம் வாழ முடியாது என்றும், குறைந்த வயதிலேயே இறந்து விடுவோம் என்றும் தவறாகக் கணித்த ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் கணிப்பு முற்றிலும் பொய்யாகியுள்ளது. தங்களுக்குக் குறைந்த ஆயுளே இருக்கும் என எதிர்மறையாகக் கணித்தவர்களில் சுமார் 59 சதவீதம் பேர், தாங்கள் நினைத்த வயதைத் தாண்டி பல ஆண்டுகள் கூடுதல் ஆயுளுடன் வாழ்ந்துள்ளனர். நேர்மறை எண்ணங்களும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையுமே இத்தகைய கூடுதல் ஆயுளுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தங்களின் எதிர்பார்க்கப்பட்ட வயதாக ’80’-ஐத் தேர்ந்தெடுத்தது, நாட்டின் சராசரி ஆயுட்காலம் குறித்த பொதுவான விழிப்புணர்வையே காட்டுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் சுய எண்ணங்களும், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அவர்களின் ஆயுட்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இந்த ஜப்பானிய ஆய்வு உலகிற்கு அழுத்தமாக உணர்த்தியுள்ளது.