Posted in

ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்டுகள் மீது சைபர் தாக்குதல்: ஈரான் மீது பிரான்ஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு!

பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலுள்ள நூற்றுக்கணக்கான சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிரூட்டும் அமைப்புகளை (Refrigeration systems) இலக்கு வைத்து அண்மையில் தொடர் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னணியில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த (IRGC) ‘ஷாஹித் காவே’ (Shahid Kaveh) என்ற இணையவழிப் பிரிவு செயல்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ழான்-நோயல் பேரோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஊடுருவலில், ஹேக்கர்கள் தொலைதூரத்தில் இருந்து குளிரூட்டும் சாதனங்களின் வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸுக்கு உயர்த்தி அமைத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான டன் உணவுகள் மற்றும் அழுகும் பொருட்கள் பாழாகியதோடு, சில இடங்களில் வெப்ப உயர்வால் தீப்பற்றி பெரும் பொருள் சேதமும் ஏற்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கெனவே ஈரானைச் சேர்ந்த சைபர் தாக்குதல் கும்பலான ‘சைபர் அவெஞ்சர்ஸ்’ (CyberAv3ngers) தலைவர்கள் குறித்த தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வரை பரிசுத்தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸிற்கான ஈரான் தூதருக்குப் பாரிஸ் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இந்த சைபர் குற்றம் தொடர்பாக முறையான நீதித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளின் உட்கட்டமைப்புப் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளும், ஹேக்கர்கள் மீதான புலனாய்வு நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.