Posted in

அமெரிக்க விமான நிலையத்தில் ஜெட் இன்ஜின் காற்று பலத்தால் தலைகீழாக கவிழ்ந்த சிறிய விமானம்!

கலிபோர்னியாவில் உள்ள ஜான் வெய்ன் விமான நிலையத்தில், கடந்த சனிக்கிழமை அன்று பயிற்சி விமானம் ஒன்றைக் தரையிறக்கிவிட்டு சிறிய ரக செஸ்னா 172 விமானம் டேக்ஸி பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் புறப்படத் தயாராக இருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 வணிக விமானத்தின் இன்ஜின் வெளிப்படுத்திய கடுமையான காற்றழுத்தம் (Jet blast) இந்தச் சிறிய விமானத்தின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிறிய விமானம் திடீரெனத் தலைகீழாகத் தன் மீது கவிழ்ந்து ஓடுபாதையில் விழுந்தது.

இந்த விபத்து குறித்து விமானத்தில் பயணம் செய்த பயிற்சி மாணவர் குனால் காவ்லி மற்றும் விமானப் பயிற்சியாளர் ஜேசன் ரு ஆகிய இருவரும் கூறுகையில், திடீரென ஏற்பட்ட பலத்த காற்றால் என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், அது ஒரு பயங்கரமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இருவர் எந்தவித காயமுமின்றித் தப்பினர். அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானத்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்துக்கான உரிய காரணங்கள் குறித்து அமெரிக்கக் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) தற்போது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விமான நிலைய ஓடுபாதைகளில் பெரிய வணிக விமானங்களின் காற்று வெளிப்பாட்டால் சிறிய விமானங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.