Posted in

அமெரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தையா? முற்றிலும் பொய்! டொனால்ட் டிரம்ப் கருத்தை மறுத்து ஈரான் அதிரடி  

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய ராணுவ மோதல்களுக்கு மத்தியிலும், இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். டிரம்ப்பின் இந்தக் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தங்களின் தரப்பிலிருந்து எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிராந்திய மத்தியஸ்தராகச் செயல்படும் கத்தாரின் தூதுவர் ஈரானுக்கு மேற்கொண்ட பயணத்தை மட்டுமே தாங்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெஹ்ரான் விளக்கியுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவுடன் தற்பொழுது நடந்து வரும் ரகசிய மற்றும் அதிகாரப்பூர்வ தூதரகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வாஷிங்டனின் ஒரு பெரிய ‘ஏமாற்று வேலை’ (Deception Campaign) என்று ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மனூசெஹ்ர் மொட்டாகி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், “அமெரிக்கா அமைதியை விரும்பவில்லை; மாறாக இஸ்லாமியக் குடியரசை முழுமையாக வீழ்த்தும் நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்படும் சதிவலை தான் இது” என்று ஈரானிய தூதர்களுக்குப் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் தங்களின் கடுமையான தவறு என்றும், பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்க நினைத்த சில தீவிரப் பிரிவினரே இதற்குக் காரணம் என்றும் ஈரானிய அதிகாரிகள் அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், இந்தச் செய்திகளையும் ஈரான் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் இறையாண்மை தங்களின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், அமெரிக்கா தனது புதிய பொருளாதாரத் தடைகள் மூலம் கடந்த ஜூன் மாத ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் தற்போதைய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அந்நாட்டின் புதிய தலைமை அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று ஈரானியப் புரட்சிகரப் படைகளும் தீவிரக் கொள்கையாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா தொடர்ந்து தங்களின் எல்லைகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை’ (Islamabad MoU) தாங்கள் இனி மதிக்கப் போவதில்லை என்று ஐநா சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சையத் இரவானியும் எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் போர் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து விடுத்து வருவது வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *