ஈரானில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாகக் கைது செய்யப்பட்ட அலி ரெசா ரெய்சி (Alireza Raisi) என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்ஃகான் நகரில் உள்ள சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது தந்தையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது கதறி அழுத தன் தந்தையைச் சமாதானப்படுத்திய அவர், “அப்பா, அழாதீர்கள்” என்று கூறி ஆறுதல்படுத்தியுள்ளார்.
மகன் தன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று கூறித் தந்தை வருந்தியபோது, தன்னை நினைத்து எப்போதுமே பெருமைப்படுவதாக மகன் பதிலளித்துள்ளார். மேலும், போராட்டத்தில் உயிரிழந்த தனது உறவினரின் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமாடியும் அவர் தனது இறுதி உரையாடலின் போது கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரானின் நீதித்துறை நடைமுறைகள் மீதான கண்டனங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கைதிகள் மீதான மரண தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.