நடிகர் மற்றும் முதலமைச்சர் த.வெ.க விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைக் குழுவின் ஆய்வில் இருந்த போது இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஃப்ரீலான்சிங் எடிட்டர் உமாசங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், திருவேற்காட்டைச் சேர்ந்த ஃப்ரீலான்சிங் எடிட்டர் உமாசங்கர் உள்ளிட்ட பலரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் உமாசங்கர் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தங்கள் தரப்பு நபர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து உமாசங்கரின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தடுப்புக்காவல் சட்டத்தைப் பயன்படுத்தியதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், குண்டர் சட்டம் போட்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், எடிட்டர் உமாசங்கர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேவேளையில், திரைப்பட கசிவு தொடர்பாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கின் மற்ற சைபர் குற்றவியல் விசாரணைகளுக்கு உமாசங்கர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.