பாஜக முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளரான கருப்பு முருகானந்தம், பெண் நிர்வாகி ஒருவர் அளித்த பாலியல் தொல்லை புகாரின் கீழ் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பாஜக முன்னாள் பெண் நிர்வாகி திவ்யா சேஷாத்ரி, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னிடம் நெருக்கமாகப் பழகி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கருப்பு முருகானந்தம் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றும், கணவரைப் பிரிந்து வாழ்ந்த அந்தப் பெண்ணுக்கு நண்பர் மூலமாக உதவி மட்டுமே செய்ததாகவும் கருப்பு முருகானந்தம் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூகத்தில் மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் தன் மீது உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் காரணமாக ஏற்கெனவே பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்ட நிலையில், புகார் அளித்த பெண் நிர்வாகியும் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் சூழலில், கருப்பு முருகானந்தத்தின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.