காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு முதற்கட்டமாக அறிவித்த நிவாரண உதவிகளை வரவேற்ற அவர், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யக் கூடுதல் நிதி மற்றும் ஆதரவு அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிவாரணத் தொகையில் ரூ.25 லட்சத்தை உடனடியாக வழங்கவும், மீதமுள்ள ரூ.25 லட்சத்தை நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்தி அதன் மூலம் வரும் வட்டி வருவாயைக் குடும்பங்களின் செலவுகளுக்குப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தகுதியின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கச் சிறப்பு உதவித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள், மீனவர்களுக்கான அவசர்கால தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். கடலில் விபத்துக்கள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்களைத் தவிர்க்கப் புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கண்காணிப்பு முறைகளைத் தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்து அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்த மீனவக் குடும்பங்களின் பொருளாதார நிலை மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு விரைந்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மீனவர் பாதுகாப்பு அறிக்கையை வெளியிட்டு அவசரகால மீட்பு அமைப்புகளின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.