தேனி அரசு பள்ளி தேசியக் கொடிகம்பத்தில் காலி மதுபாட்டில் ஏற்றி வைக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள கரியணம்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் தீபாவளி விடுமுறை நாட்களில் பாதுகாப்பு வேலியைத் தாண்டிச் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தேசியக் கொடியேற்றும் கம்பத்தில் காலி மதுபாட்டிலைக் கட்டி தொங்கவிட்டு சென்றுள்ளனர். கொடிகம்பத்தில் மதுபாட்டில் தொங்குவதைக் கண்டு ஊர்மக்கள் அதிர்ச்சியடைந்து கோம்பை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், தேசியக் கொடிக்கும் கொடிகம்பத்திற்கும் மிகப்பெரிய அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மதுவினால் மதியிழந்து இளைஞர்கள் சீரழிவதைக் காணும்போது நெஞ்சம் பதைபதைப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமாக உள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோம்பை காவல்துறையினர் கொடிகம்பத்தில் இருந்த மதுபாட்டிலை அகற்றினர்.
விசாரணையில் 12 வயது சிறுவன் ஒருவன் விளையாட்டாக மதுபாட்டிலைக் கட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவரவே, அவனது பெற்றோரை அழைத்து எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.