தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 20,982 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ்.பாபு 24,993 வாக்குகள் பெற்று சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கடந்த மூன்று தேர்தல்களாக இத்தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த முதலமைச்சருக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு, தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்று வரும் நிலையில், நட்சத்திரத் தொகுதியான கொளத்தூரிலும் அக்கட்சி முன்னிலை வகிப்பது அரசியல் நோக்கர்களை வியக்க வைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் 5,982 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் அதிகமுள்ள இத்தொகுதியில், விஜய்யின் “மாற்றத்திற்கான முழக்கம்” எடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறையுமா அல்லது வி.எஸ்.பாபு தனது முன்னிலையைத் தக்கவைப்பாரா என்பது மதியத்திற்குள் தெரிந்துவிடும்.