Posted in

இங்கிலாந்து தேர்தலில் லேபர் கட்சி படுதோல்வி; வேல்ஸ், ஸ்காட்லாந்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ‘கை’ சின்னம்; பதவியை ராஜினாமா செய்வாரா பிரதமர் கீர் ஸ்டார்மர்?

இந்தத் தேர்தலில் லேபர் கட்சி சுமார் 600-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி இடங்களை இழந்துள்ளதோடு, 20-க்கும் மேற்பட்ட கவுன்சில்களில் தனது அதிகாரத்தை இழந்துள்ளது. வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் (Senedd), பிளெய்ட் கும்ரி (Plaid Cymru) 43 இடங்களைப் பிடித்து முதன்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே சமயம், நைஜல் ஃபாரேஜின் ‘ரிஃபார்ம் யுகே’ (Reform UK) கட்சி 34 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் 9 இடங்களை மட்டுமே பெற்ற லேபர் கட்சி, வேல்ஸ் அரசியலில் இருந்து ஏறக்குறைய துடைத்தெறியப்பட்டுள்ளது. இந்தத் தோல்விக்கு பிரதமர் கீர் ஸ்டார்மரின் மெத்தனமான போக்கே காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மறுபுறம், ‘கிரீன் பார்ட்டி’ (Green Party) மற்றும் ‘ரிஃபார்ம் யுகே’ ஆகிய கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளன. கிரீன் பார்ட்டி லண்டனின் ஹாக்னி (Hackney) மற்றும் லூயிஷாம் (Lewisham) ஆகிய பகுதிகளில் முதல்முறையாக மேயர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல, ரிஃபார்ம் யுகே கட்சி வடக்கு இங்கிலாந்தின் சண்டர்லேண்ட் (Sunderland) மற்றும் கேட்ஸ்ஹெட் (Gateshead) போன்ற லேபர் கட்சியின் பாரம்பரியக் கோட்டைகளைக் கைப்பற்றி அதிரடி காட்டியுள்ளது. இங்கிலாந்தின் இரு கட்சி அரசியலுக்கு இது ஒரு முடிவுரையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் லேபர் கட்சிக்குள் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளன. “ஸ்டார்மர் உடனடியாகப் பதவி விலகி, புதிய தலைமைக்கு வழிவிட வேண்டும்” என அக்கட்சியின் மூத்த தலைவர்களே வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, பர்மிங்காம் மாநகராட்சித் தலைவர் தனது பதவியை இழந்திருப்பது லேபர் கட்சிக்கு விழுந்த பலத்த அடியாகக் கருதப்படுகிறது. “மக்கள் பழைய அரசியலை வெறுக்கிறார்கள்; அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு இந்த முடிவுகளே சாட்சி” என ரிஃபார்ம் யுகே தலைவர் நைஜல் ஃபாரேஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்திலும் லேபர் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்காட்டிஷ் லேபர் தலைவர் அனாஸ் சர்வார் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். “இந்தத் தோல்வி ஒரு பேரிடர்; கட்சி தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் வரும் பொதுத் தேர்தலில் லேபர் கட்சிக்கு இடமே இருக்காது” என்று தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். கீர் ஸ்டார்மர் பதவி விலக மறுத்தாலும், வரும் நாட்களில் கட்சிக்குள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் அரசியல் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.