சினிமா உலகின் பிரம்மாண்ட படைப்பான ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தின் விண்வெளி ஓடத்தைப் போன்ற தோற்றத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுமார் 740 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,000 கோடி) செலவில் அமைக்கப்பட்ட ‘லூகாஸ் நரேடிவ் ஆர்ட் அருங்காட்சியகம்’ (Lucas Museum of Narrative Art) வரும் செப்டம்பர் 22 அன்று பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படவுள்ளது.
‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்பட வரிசையை உருவாக்கி உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜார்ஜ் லூகாஸ் மற்றும் அவரது மனைவி மெல்லோடி ஹாப்சன் ஆகியோரால் 16 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொலைநோக்குத் திட்டம், பல்வேறு கட்ட நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வடிவமைப்பு தாமதங்களைக் கடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக முழு வடிவம் பெற்றுள்ளது. MAD ஆர்கிடெக்ட்ஸ் அமைப்பின் கட்டிடக் கலைஞர் மா யான்சோங் என்பவரால் ஒரு விண்வெளி ஓடத்தைப் போலவும், மேகக் கூட்டங்களைப் போலவும் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கட்டிடக் கலையின் புதிய அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
1,00,000 சதுர அடி பரப்பளவிலான இந்த அருங்காட்சியகத்தில், மனித நாகரிகத்தின் ஆதி குகை ஓவியங்கள் முதல் நவீன காமிக்ஸ், அனிமேஷன் மற்றும் சினிமா வரையிலான ‘காட்சி வழிக் கதைசொல்லல்’ (Visual Storytelling) கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படப் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட அசல் விண்வெளி ஓட மாதிரிகள், ஆடை வடிவமைப்புகள், திரைப்படக் கருவிகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்கள் உள்ளிட்ட 1,300-க்கும் மேற்பட்ட அரிய சேகரிப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
இரண்டு நவீன திரையரங்குகள், ஆராய்ச்சி நூலகம், உணவகங்கள் மற்றும் இயற்கை பூங்காக்களை உள்ளடக்கிய இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம், சினிமா மற்றும் கலை உலகப் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்பட ரசிகர்களின் பல ஆண்டு கனவு நனவாகும் வகையில் திறக்கப்படவுள்ள இந்த அருங்காட்சியகம், சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.