ரூ.5 கோடி லஞ்சம் தர முன்வந்த நபர் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் மௌனம் காப்பது ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கும் செயல் எனக் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காகத் தமக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒரு நபர் முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் பொது மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால், லஞ்சம் தர முயன்ற அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்தாமலும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமலும் அமைச்சர் மௌனம் காப்பது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும் செயல் என்று திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
அரசுப் பதவிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற நபரை அதிகாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் காட்டிக் கொடுக்காமல் மறைப்பது குற்றத்திற்குத் துணை போவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டிய அமைச்சரே இதுபோன்ற சட்டவிரோதச் செயலை மூடி மறைப்பது மக்களிடையே அரசின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தீவிர விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில் ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
தற்போது வரை லஞ்சம் தர முயன்ற நபர் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அல்லது அரசுத் தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் அரசின் விளக்கம் ஆகியவை குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.