Posted in

பன்னுன் கொலைச் சதி வழக்கு: இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 235 மாதங்கள் சிறை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் (Gurpatwant Singh Pannun) கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டிய வழக்கில், 55 வயதான இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 235 மாதங்கள் (சுமார் 19.5 ஆண்டுகள்) சிறைத் தண்டனை விதித்துள்ளது. நியூயார்க் தெற்கு மாவட்ட ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி விக்டர் மரேரோ (Victor Marrero) நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற சுமார் 80 நிமிட விசாரணைக்குப் பிறகு இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பன்னுனைக் கொலை செய்வதற்காக 1,00,000 அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலிப்படையினரைத் தேடியதாகவும், அதில் முன்பணமாக 15,000 டாலரை மாறுவேடத்தில் இருந்த அமெரிக்கப் புலனாய்வு அதிகாரியிடம் வழங்கியதாகவும் நிகில் குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2023 ஜூன் 30-ஆம் தேதி செக் குடியரசின் பிராக் நகரில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட அவர், கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றது, அதற்கான சதித்திட்டம் மற்றும் பணமோசடி சதி ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பை அறிவித்த அமெரிக்க வழக்கறிஞர் ஜேமி மெக்டொனால்ட், அமெரிக்க மண்ணில் வன்முறையில் ஈடுபட முயல்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு இந்தத் தண்டனை ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் பேசிய நிகில் குப்தா, தனது செயலால் எந்த உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படாததற்குத் தான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், குறைந்தபட்ச தண்டனையை எதிர்பார்த்திருந்ததாக அவரது வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாஷ் யாதவ் என்பவர் அமெரிக்கக் காவலில் இல்லை என்றும், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்த பிறகு நிகில் குப்தாவை நாடு கடத்துவதற்கான (Deportation) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.