Posted in

எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உட்பட 4 பேர் காயம்

பாரசீக வளைகுடாவில் பயணித்த எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உட்பட 4 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

லைபீரிய நாட்டுக் கொடியுடன் பயணித்த ‘எம்.டி ஃபுஜைரா எனர்ஜி’ (MT FUJAIRAH ENERGY) என்ற எண்ணெய்க் கப்பல், அபுதாபியின் அல் ரூவைஸ் பகுதியில் இருந்து துபாய் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கப்பலில் 6 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 22 ஊழியர்கள் பயணித்த நிலையில், ஏவுகணை போன்ற பொருள் கப்பலைத் தாக்கியதில் 4 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன. இதில் லேசான காயமடைந்த இந்திய மாலுமி, உடனடியாகக் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். கப்பலில் இருந்த பிற 5 இந்தியர்கள் உட்பட 18 ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடல் எல்லைகளில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா வழியிலான வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறது.

தற்போது காயமடைந்த இந்திய மாலுமிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், எஞ்சிய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.