தென்அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் உள்ள ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமானநிலையத்திலிருந்து பியூரா நகருக்குச் செல்ல LATAM ஏர்லைன்ஸ் விமானம் (LA2302) தயாராகிக் கொண்டிருந்தது. அக்டோபர் 19 திங்கள்கிழமை காலை நேரத்தில், விமானம் ஓடுபாதையில் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் அதன் இடதுபுற என்ஜின் மற்றும் இறக்கைப் பகுதியில் திடீரெனத் தீப்பிடித்துப் அடர்ந்த புகையுடன் தீப்பிளம்பு உருவானது. இந்த விபத்து நடந்த நேரத்தில் பயணிகள் பலர் விமானத்தின் உள்ளே இருந்த நிலையில், இறக்கையில் தீப்பிடித்து எரிவதை ஜன்னல் வழியே கண்டு கடும் அச்சமடைந்தனர்.
சம்பவம் குறித்து உடனடியாகத் தகவலறிந்த விமானநிலையத் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து என்ஜினில் எரிந்த தீயை அணைத்து முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும் எவ்விதக் காயமுமின்றிப் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத தொழில் நுட்பக் கோளாறு (unforeseen technical event) காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக LATAM ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இடதுபுற லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானத்தை இயக்கும் முயற்சி கைவிடப்பட்டதாகப் பயணி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்கள் மூலம் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக விமானநிலையத்தின் பிற விமானச் சேவைகள் எதுவும் பாதிக்கப்படாமல் வழக்கம்போல் இயங்கின. இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியத் தொழில்நுட்பக் குழுவினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விமானத்தின் இறக்கைப் பகுதியில் தீப்பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ஏர்பஸ் A320 விமானத்தில் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.