ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்குகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வீரமணியின் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் செயல்பட்ட பிரகாஷ் கண்ணையாவிற்குத் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள சொத்துகளை விற்றுப் பெறப்பட்ட நிதிப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகாமல் தலைமறைவானார்.
பிரகாஷ் கண்ணையா லண்டனுக்குத் தப்பிச் சென்று பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் நிலையில், சென்னை காவல்துறை சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது. குற்ற வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் எந்த நாட்டில் இருக்கிறார் மற்றும் அவரின் இருப்பிட நகர்வுகளைக் கண்டறியவே இந்த புளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே இவருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவருடைய ரூ.24 கோடி வங்கி கணக்கையும் போலீசார் முடக்கியுள்ளனர்.
இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் மூலம் பிரகாஷ் கண்ணையாவின் இருப்பிடத்தை லண்டன் காவல் துறையினருடன் இணைந்து இந்திய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சந்தேக நபர் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைத்த பிறகு, அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.