உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்குப் பெருமளவில் ஆட்கள் தேவைப்படும் நிலையில், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களைப் போலி சினிமா ஆடிஷன்கள் (Movie Casting Calls) மற்றும் செயற்கை நுண்ணறிவு விளம்பரங்கள் மூலம் ஏமாற்றிப் போர்க்களத்திற்கு அனுப்பி வைக்கும் அதிர்ச்சி தரும் சர்வதேச மோசடி வலையமைப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘கோட் ஃபார் ஆப்பிரிக்கா’ (Code for Africa) எனும் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் சர்வதேச ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. சமூக வலைதளங்களில் ‘குளோபல் காஸ்டிங்’ (Global Casting Call) என்ற பெயரில் புதிய திரைப்படத் திட்டத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. ஏஐ (AI) தொழில் நுட்பத்தின் மூலம் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்களுடன் கூடிய இந்த விளம்பரங்கள், வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்களைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
சினிமாவில் நடிக்கும் ஆசையில் இந்த விளம்பரங்களை நம்பி ரஷ்யாவிற்கு வரும் இளைஞர்களிடம், அவர்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் ஆவணங்களைப் பறித்துக் கொண்டு துப்பாக்கி முனையில் ராணுவ ஒப்பந்தங்களில் கட்டாயக் கையெழுத்து வாங்கப்படுகிறது. பின்னர் சில வாரங்கள் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக உக்ரைனின் அபாயகரமான முன்வரிசைப் போர்க்களத்திற்கு (Frontlines) அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், கியூபா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிக்கிப் பலியாகியுள்ளனர்.
இதுவரை 28,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள் இத்தகைய தந்திரமான விளம்பரங்கள் மற்றும் அதிக சம்பள ஆசைகாட்டப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா ஆடிஷன், ஓட்டுநர் மற்றும் பாதுகாப்புப் பணி எனக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றிப் போருக்கு அழைக்கும் ரஷ்யாவின் இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.