Posted in

புடின் டார்கெட் செய்த 17 வயது சிறுவன்: ரஷ்யாவின் கிரிப்டோ மோசடியை உடைத்த பிரிட்டிஷ் மாணவன்!

உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க, ரஷ்யா தனது ‘ரூபிள்’ நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட ‘A7A5’ என்ற புதிய ஸ்டேபிள்காயின் (Stablecoin – நிலையான மதிப்புள்ள கிரிப்டோகரன்சி) முறையைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான டாலர்களைக் கடத்துவதை அலெக்சாண்டர் கண்டுபிடித்தார். இவர் உருவாக்கிய ‘உலகளாவிய கிரிப்டோகரன்சி பணமோசடி தரவுத்தளம்’ மற்றும் ஹென்றி ஜாக்சன் சொசைட்டி அமைப்புக்காக அவர் எழுதிய விரிவான ஆய்வு அறிக்கை, ரஷ்யாவின் ரகசிய நிதி ஆதாரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அலெக்சாண்டர் பிரவுடர் உட்பட சில முக்கிய பிரிட்டிஷ் ஊடகவியலாளர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதித்து (Sanctions) உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் நீண்டகால அரசியல் எதிரியாகக் கருதப்படும் பிரபல தொழிலதிபர் பில் பிரவுடரின் (Bill Browder) மகன்தான் இந்த அலெக்சாண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை வழியில் மகனும் புடினின் தடைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்தத் தடை குறித்துப் பேசிய 17 வயதே ஆன அலெக்சாண்டர் பிரவுடர், “ரஷ்யா என் மீது விதித்துள்ள இந்தத் தடையை நான் ஒரு பெருமைக்குரிய அங்கீகாரமாகவே (Badge of honour) பார்க்கிறேன்” என்று தைரியமாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தடைப் பட்டியலில் இடம்பிடித்த மிக இளம் வயது நபர் இவர்தான் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.