Posted in

ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசி உரையாடல்: டான்பாஸ் பகுதியைக் கோரி புடின் பிடிவாதம்!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை சுமார் ஒன்றரை மணி நேரம் தொலைபேசி வாயிலாக அரிய உரையாடலை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர நிலவரங்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும் எனக் கூறிய புடின், உக்ரைனின் டான்பாஸ் (Donbas) பிராந்தியம் முழுவதையும் ரஷ்யாவிடம் ஒப்படைப்பதில் எந்தக் சமரசமும் செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தினார். மேலும், இடைக்கால வரலாற்றுச் சம்பவங்களை சுட்டிக்காட்டி ரஷ்யாவின் உரிமைகளை நியாயப்படுத்தி அவர் உரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தரப்பின் ஒப்புதலுடனும் ஆலோசனையுடனும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உரையாடலில், நேர்மையான மற்றும் நீடித்த அமைதி மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தினர். போரை நிறுத்துவதற்கு உக்ரைன் தனது நிலப்பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற புடினின் நிபந்தனையை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற தலைவர்களும் ஏற்க மறுத்துள்ளனர். ஜெர்மன் அதிபர் ப்ரீட்ரிச் மெர்ஸ் உட்பட பல தலைவர்கள், உக்ரைனைத் தவிர்த்துவிட்டு அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல அபுதாபியில் சர்வதேசக் கூட்டத்திற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது.

எனினும், டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றுவதில் புடின் பிடிவாதமாக இருப்பதால், போர் நிறுத்த முயற்சிகளில் சிக்கல் நீடிக்கிறது.