Posted in

ரஷ்ய நிலப்பரப்பு தாக்கப்பட்டால் அனைத்து ஆயுதங்களும் பயன்படுத்தப்படும்: புதின் எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் திட்டம் ரஷ்யாவுக்கு இல்லை என்று தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆனால் தங்களது நாட்டின் மீதோ அல்லது எல்லைப் பகுதிகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் கைவசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்திப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். வியாழக்கிழமை அன்று சோச்சியில் நடைபெற்ற வால்டாய் விவாத மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய புடின், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர்.

ரஷ்யாவின் காலினின்கிராட் (Kaliningrad) பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தங்களின் மிக நவீன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தத் தயங்காது என்று புடின் உறுதியாகக் கூறியுள்ளார். மேலைநாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகள் நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குச் சமம் என்று குற்றம் சாட்டிய அவர், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், ரஷ்யா ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் என்ற குற்றச்சாட்டை நிராகரித்த அவர், மேற்கத்திய நாடுகள் வீண் பதற்றத்தை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

புடினின் இந்த எச்சரிக்கை உரை குறித்துப் பேசிய நேட்டோ அமைப்பின் புதிய பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, ரஷ்யா தங்களை பிரிக்க முயற்சி செய்வதாகவும், ஆனால் உக்ரைனுக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதே இதற்குச் சரியான பதிலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்ய நிலப்பரப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

தற்போது உக்ரைன் எல்லை மற்றும் பால்டிக் கடல் பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகளை ரஷ்யா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடினின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன.