அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எரிசக்திப் பகுதிகள் மீதான போரை நிறுத்தக் கோரிக்கை விடுத்த சில நாட்களிலேயே, ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அக்டோபர் 13 இரவு மற்றும் 14 ஆம் தேதிகளில் கீவ் நகரின் முக்கிய மின் உற்பத்திய நிலையங்களான சி.எச்.பி-4 உட்பட அனைத்து வெப்பமின் நிலையங்களையும் இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்தத் தாக்குதல்களால் மின் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததுடன், குடியிருப்புக் கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகின. இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, கூட்டாளி நாடுகளிடம் இருந்து எவ்வித முன் எச்சரிக்கையும் கிடைக்காத நிலையிலேயே இந்தத் தாக்குதல் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் சேதமடைந்து குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து வேண்டுமென்றே ரஷ்யா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைக்கவும், மின் விநியோகத்தை மீண்டும் சீரமைக்கவும் அவசரகால மீட்பப் படையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வழித் தற்காப்பு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.