Posted in

ரஷ்யா விண்ணில் அணு ஆயுத செயற்கைக்கோள் ஏவத் திட்டமா: உளவுத் தகவல்

ரஷ்யா அணு ஆயுதத்தைக் கொண்டு செல்லக்கூடிய ‘ஸ்புட்னிக்-எஸ்’ (Sputnik-S) என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளதாகவும், அதை டிசம்பர் மாதத்திற்குள்ளாகவே விண்ணில் ஏவக்கூடும் எனவும் மேற்கத்திய உளவுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜெர்மன் ஊடகங்களான WDR, NDR மற்றும் Süddeutsche Zeitung ஆகியவை நவம்பர் 23 அன்று வெளியிட்ட புலனாய்வுத் தகவல்களிலும், நேட்டோ நாடுகளிடையே பகிரப்பட்ட உளவு அறிக்கைகளிலும் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் பல ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக உருவாக்கப்பட்டு மாஸ்கோ பகுதியில் சேமிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. விண்வெளியில் அணு வெடிப்பு நிகழ்த்தப்பட்டால், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் உள்ள ஏராளமான செயற்கைக்கோள்கள் செயலிழந்து தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் மற்றும் வானிலை சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யத் தரப்பு கடுமையாக மறுத்துள்ளது; ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என பெர்லினில் உள்ள ரஷ்யத் தூதரகம் நிராகரித்துள்ளது. மேலும், தங்களது விண்வெளி நடவடிக்கைகள் அமைதியான நோக்கங்களுக்காகவும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டும் இருப்பதாகக் கூறியுள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த அறிக்கையைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில், விண்வெளிப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் தயார்நிலைகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் மத்தியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்கள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதல் குறித்த சர்வதேசக் கண்காணிப்பு தற்போது தொடர்ந்து வருகிறது.