நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது சென்னை பரங்கிமலை காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தமிழக அரசிற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவறு செய்யும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காகத் துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பது அடக்குமுறையின் உச்சம் என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் விமர்சித்துள்ளார்.
முன்னதாக, மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சி என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் எனச் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலந்தூரைச் சேர்ந்த தவெக நிர்வாகி நந்தகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் பரங்கிமலை காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள சீமான், “தவறு செய்யும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காகத் தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்கு தொடுப்பதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகியோர் மீதான புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சியினரின் காணொளிகளுக்கு மட்டும் காவல்துறை வேகம் காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
காரைக்குடி போதைப்பொருள் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீதும் இதே வேகத்தில் அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் சீமான் வினவியுள்ளார். சாட்டை துரைமுருகன் மீதான வழக்கில் பரங்கிமலை காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர்ந்துள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான இந்த விவாதம் தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.