நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையைப் பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலம் மாநகரத்தின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் 25 ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘சூயஸ்’ (Suez) எனும் பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த அதிரடி முடிவுக்கு நாம் தமிழர் கட்சியின் (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “அர்ஜென்டினா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்கிறோம் என்ற பெயரில் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அந்த மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, இறுதியில் அந்நாட்டு மக்களால் அடித்துத் துரத்தியடிக்கப்பட்ட ஒரு மோசமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சூயஸ் நிறுவனத்துடன் தவெக அரசு ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பன்னாட்டுத் தனியார் நிறுவனத்தால் சிறப்பாகச் செய்ய முடிகிற ஒரு பொதுச் சேவையை, இவ்வளவு பெரிய அதிகாரக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? என்றும் அவர் முதல்வர் விஜய்யை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, ஆடு, மாடு, பறவைகள் என உலகில் வாழும் அத்தனை பொது உயிர்களுக்குமான உயிருடைமை என்றும், அதனைச் சந்தைப்படுத்திப் பொருளீட்டும் கார்ப்பரேட் வணிகத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் தனது கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் கவுன்சிலர்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ ஆகியோருக்கு இடையே இத்திட்டத்திற்கு எதிராகக் கடுமையான வாக்குவாதங்களும், வெளிநடப்புகளும் அரங்கேறியுள்ள நிலையில், தற்பொழுது சீமானின் இந்த நேரடித் தாக்குதல் இந்த விவகாரத்தை மாநில அளவில் பெரிய அரசியல் புயலாக மாற்றியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, இயற்கை வளங்களையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் தவெக அரசின் இத்தகைய நடவடிக்கைகள், தேர்தல் காலத்தில் விஜய் பேசிய ‘மக்களுக்கான மாற்று அரசியல்’ கொள்கைக்கு முற்றிலும் எதிரானது என்று நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமரிசித்து வருகின்றனர். சேலம் குடிநீர் விவகாரத்தில் சீமான் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகளுக்குத் தவெக அரசுத் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.