Posted in

விமான எரிபொருள் வரிச்சலுகை: தவெக அரசைச் சாடி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை!

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைத்து தவெக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த முடிவை மத்திய அரசு வரவேற்றுப் பாராட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் சீமான் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மக்கள் அல்லல்படும் நிலையில், அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்றாடம் உழைத்து வாழும் சாதாரண மக்களின் அடிப்படை உணவுக் தேவைகளைப் பூர்த்தி செய்ய எந்தவித அக்கறையும் காட்டாத அரசு, பல்லாயிரம் கோடி முதலீட்டில் இயங்கும் தனியார் விமான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விமானப் பயணச் செலவைக் குறைப்பதை விட மக்களின் பசியைப் போக்குவதே முதன்மைப் பணியாக இருக்க வேண்டும் எனத் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிர்வாகக் குளறுபடிகள் அரசின் மக்கள் விரோதப் போக்கைக் காட்டுவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீமானின் இந்த விமர்சனம் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ள சூழலில், தவெக தரப்பில் இருந்து இதுவரை இதற்கான பதிலடிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

விமான எரிபொருள் வரிக் குறைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடுத்து வரும் கேள்விகளுக்கு தவெக அரசு அளிக்கும் விளக்கம் குறித்துப் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.