Posted in

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்-க்கு முக்கியப் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு!

அரசில் பல முக்கியத் துறைகளில் பணியாற்றிப் பிரபலமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) புதிய தலைவராக நியமித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1992-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ஜே.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையத்தின் இயக்குநர் எனப் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். கசடறப் பணிகளைச் செய்யும் திறமை கொண்ட மூத்த அதிகாரியாக அறியப்படும் இவர், இந்த செப்டம்பர் மாதத்துடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.

இந்நிலையில்தான், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தலைவர் இன்றிச் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்-ஐ நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அடுத்த 5 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை அவர் இந்தப் பவர்ஃபுல் பொறுப்பில் நீடிப்பார். மின் கட்டணங்களை நிர்ணயம் செய்தல் மற்றும் மின் வாரிய செயல்பாடுகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரங்கள் கொண்ட இந்த ஆணையத்தின் தலைவர் பதவி மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், பணி ஓய்வு பெறும் கடைசி நேரத்தில் மூத்த அதிகாரி ஒருவருக்கு இத்தகைய உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது, பணி மூப்பு வரிசையில் அடுத்தடுத்துப் பதவி உயர்வை எதிர்நோக்கியிருந்த பிற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடையே சலசலப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. ஓய்வுபெறும் அதிகாரிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது எனச் சில அதிகாரிகள் முணுமுணுத்து வரும் வேளையில், அனுபவம் வாய்ந்த நிர்வாகி என்பதால் மின்சாரத் துறையைச் சீரமைக்க ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் பெரிதும் உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.