இத்தாலியின் டுரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஷ்ரவுட் ஆஃப் டுரின்’ (Shroud of Turin) எனப்படும் புனிதத் திருத்துகிலில் நடத்தப்பட்ட நவீன டிஎன்ஏ (DNA) ஆய்வில், பல நூற்றாண்டுகளாக அந்தத் துணியுடன் தொடர்பிலிருந்த மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணுத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 1978-ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாகச் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, நவீன மெட்டாஜெனோமிக் வரிசைமுறை (Metagenomic sequencing) தொழில்நுட்பம் மூலம் சர்வதேச அறிவியலாளர்கள் குழு ஆய்வு செய்து ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ (Scientific Reports) ஆய்விதழில் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் பல்வேறு மனித இனங்களைச் சேர்ந்த மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ தடயங்களுடன், மனிதத் தோலில் காணப்படும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் உப்புத் தன்மையுள்ள சூழலில் வாழும் நுண்ணுயிரிகள் (Archaea) கண்டறியப்பட்டுள்ளன. மேலும் கோதுமை, கேரட், மக்காச்சோளம், வாழை மற்றும் நிலக்கடலை ஆகிய தாவரங்களின் மரபணுக்களும், மாடு, பன்றி, கோழி, நாய் மற்றும் பூனை ஆகிய விலங்குகளின் தடயங்களும் அதில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, மத்தியதரைக் கடல் பகுதியின் சிவப்புப் பவளத்துடன் (Mediterranean red coral) தொடர்புடைய டிஎன்ஏ தடயமும் இந்தத் துணியில் இருப்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாலும், மனிதர்களால் கையாளப்பட்டதாலும் இந்தத் துணியில் பல காலகட்டங்களின் உயிரியல் தடயங்கள் கலந்துள்ளதாக லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் (University of Lancashire) தடயவியல் அறிவியல் பேராசிரியர் நோயமி புரோகோபியோ (Noemi Procopio) தெரிவித்துள்ளார். “டிஎன்ஏ சான்றுகளால் இந்தத் துணியின் வயதையோ அல்லது உண்மைத்தன்மையையோ உறுதிப்படுத்த முடியாது என்றாலும், அதன் உயிரியல் வரலாறு குறித்த புதிய தகவல்களை இது வழங்குகிறது” என அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வின் முடிவுகள் திருத்துகிலின் காலத்தைத் துல்லியமாக வரையறுக்கவில்லை என்றாலும், பழங்காலப் பொருட்களின் பயண வரலாற்றையும் அவை எதிர்கொண்ட சூழல்களையும் நவீன தடயவியல் தொழில்நுட்பம் மூலம் அறிய முடியும் என்பதை நிரூபித்துள்ளன. இந்தத் திருத்துகில் குறித்த வரலாற்று மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.