தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol), வடகொரியாவுக்குள் ராணுவ ட்ரோன்களை (Drones) சட்டவிரோதமாக அனுப்பிய தேசத்துரோக வழக்கில் சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தற்போது 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் நாட்டில் அவசரக்கால ராணுவ ஆட்சியை (Martial Law) பிரகடனம் செய்வதற்கு முன்பாக, திட்டமிட்டே இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பதற்றத்தை உருவாக்குவதற்காக இந்தச் சதியை அரங்கேற்றியதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 அக்டோபர் மாதத்தில், வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்குள் தென்கொரிய ராணுவத்தின் ட்ரோன்கள் ஊடுருவி, அங்கு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு எதிரான பிரச்சார துண்டுப் பிரசுரங்களை வீசியதாக வடகொரியா குற்றம் சாட்டியிருந்தது. அப்போதைய அதிபர் யூன் சுக் இயோல் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூன் ஆகியோர் இணைந்து, வடகொரியாவைத் தூண்டிவிட்டு ஒரு பிராந்திய மோதலை உருவாக்கவே இந்த ரகசிய ட்ரோன் ஆபரேஷனை நடத்தியதாக தற்போதைய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒரு செயற்கையான பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தி, அதை வைத்தே ராணுவ ஆட்சியை நியாயப்படுத்த அவர் முயன்றுள்ளார்.
சிறப்பு வழக்கறிஞர் சோ யூன்-சுக் தலைமையிலான விசாரணைக் குழு, முன்னாள் அதிபரின் இந்தச் செயல் நாட்டின் இறையாண்மை மற்றும் ராணுவப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டியது. மேலும், ஒரு ட்ரோன் வடகொரிய எல்லையில் விழுந்து நொறுங்கியதால், தென்கொரியாவின் முக்கிய ராணுவ ரகசியங்கள் எதிரி நாட்டுக்குக் கசிந்துள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், யூன் சுக் இயோலின் வழக்கறிஞர்கள், வடகொரியா அனுப்பிய குப்பை பலூன்களுக்குப் பதிலடி கொடுக்கவே இந்த ட்ரோன்கள் அனுப்பப்பட்டதாகக் கூறி, இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம், தோல்வியடைந்த ராணுவ ஆட்சிப் பிரகடனம் மற்றும் உள்நாட்டுப் புரட்சிக்கு (Insurrection) தலைமை தாங்கிய வழக்கில் யூன் சுக் இயோலுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ட்ரோன் ஊடுருவல் வழக்கிலும் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குத் துணையாக இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூனுக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிரடித் தீர்ப்புகள் தென்கொரிய மற்றும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.