Posted in

சிவகங்கையில் ரவுடி சுள்ளான் மதன் கொலை: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் மோதல் தீவிரம்!

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை அடுத்த மேலமங்கலத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மதன் என்ற ‘சுள்ளான் மதன்’ (26) என்பவரை மர்மக் கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டிச் கரும்புத் தோட்டத்திற்குள் வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய இவர், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பிரதீப், பாலமுருகன், பாபு ஆகிய மூன்று பேரைச் சிவகங்கை நகரக் காவல்துறையினர் விரைந்து கைது செய்துள்ளனர்.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சுள்ளான் மதனின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் கொலை மிரட்டல் விடுத்தும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். “அடுத்து உங்கள் முறை” மற்றும் “காத்திரு பகையே” போன்ற வாசகங்களுடன் பகிரப்பட்ட இந்த ஸ்டோரிகள் மற்றும் காணொளிகள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, சமூக வலைதளங்கள் குற்றச் செயல்களைப் பெருமைப்படுத்தும் மற்றும் பழிவாங்கும் களமாக மாறிவருவது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

சமூக வலைதளங்கள் வழியாக வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்ட 20 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு பேஸ்புக் பக்கம் உட்பட மொத்தம் 36 சமூக வலைதளப் பக்கங்களை மாவட்டக் காவல்துறை தீவிரமாக முடக்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறையைத் தூண்டுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.