Posted in

எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்; அவசரமாக அமெரிக்க ஆயுதங்களை வாங்கும் தைவான்

சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தற்காப்புக்காக அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களை வாங்குவது தைவானுக்கு மிக முக்கியமானது என்று அமெரிக்காவுக்கான தைவானின் முதன்மை தூதர் அலெக்சாண்டர் யுய் தஹ்-ரே (Alexander Yui Tah-ray) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் வாஷிங்டனின் தைவான் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், தன்னாட்சி பெற்ற தங்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஆயுதக் கொள்முதல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடன் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை ஒப்பந்தம், ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு தற்காலிகமாக தாமதமாகி வரும் பின்னணியில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய தூதர் யுய், தைவான் தனது நிலப்பரப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்துள்ளதாகக் கூறினார். அமெரிக்காவின் ராணுவம் வந்து தங்களைக் காப்பாற்றும் என்று சும்மா காத்திருக்காமல், தங்களை வலிமையாக்கிக் கொள்ளவே அமெரிக்க ஆயுதங்களை தைவான் வாங்குவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தைவான் எல்லையைச் சுற்றி சீனா தொடர்ந்து தனது போர் விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்த சூழலில், தைவானுக்கு தேவையான தற்காப்பு ஆயுதங்களை வழங்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை அமெரிக்காவிற்கு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் சமீபத்திய நாடாளுமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த ஆயுத ஒப்பந்தங்கள் குறித்து சீனாவுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தப்பட மாட்டாது என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

தைவான் தனது தற்காப்புக்கான பாதுகாப்புச் செலவினங்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து 11 பில்லியன் டாலர் மதிப்பில் ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணை அமைப்புகள் மற்றும் பீரங்கிகளை வாங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தைவான் ஜலசந்தியில் அமைதியை நிலைநாட்டவும் இந்த ஆயுதக் கொள்முதல் மிக அவசியமானது என தைவான் தரப்பில் வாதிடப்படுகிறது.