Posted in

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

📅 வெளியானது: April 22, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை (EPIC) இல்லாதவர்கள் வாக்களிக்க முடியுமா என்ற சந்தேகம் பலரிடையே எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் (Electoral Roll) உங்கள் பெயர் இடம் பெற்றிருந்தால் மட்டும் போதும், வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இல்லையென்றாலும் நீங்கள் தாராளமாக உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றலாம். இதற்காகப் இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்றால் போதுமானது.

வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஆவணம் ஆதார் அட்டை (Aadhaar Card) ஆகும். இது தவிர, புகைப்படம் இடம்பெற்றுள்ள பின்வரும் ஆவணங்களையும் அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம்:

  • ஆதார் அட்டை

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை (MNREGA Job Card)

  • புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள் (Passbooks)

  • தொழிலாளர் நல அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு

  • ஓட்டுநர் உரிமம் (Driving License)

  • பான் கார்டு (PAN Card)

  • மத்திய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

இவை தவிர, இந்தியக் கடவுச்சீட்டு (Passport), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document), மத்திய/மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டைகள், எம்.பி./எம்.எல்.ஏ.-க்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் மற்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரலால் (RGI) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு ஆகியவையும் ஏற்றுக்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் அடையாள அட்டையைப் (UDID Card) பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். இருப்பினும், தேர்தல் ஆணையம் வீடுகளுக்கு விநியோகிக்கும் ‘வாக்காளர் தகவல் சீட்டு’ (Voter Information Slip) ஒரு வழிகாட்டியாக மட்டுமே பயன்படும்; அதை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது என்பதை வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்களிக்கும் முன் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். உங்கள் பெயர் பட்டியலில் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்து தேர்தல் அதிகாரிகள் உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பார்கள். புகைப்படம் மங்கலாகவோ அல்லது தெளிவாக இல்லாமலோ இருந்தால் மட்டுமே கூடுதல் விசாரணை நடத்தப்படும். எனவே, வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதே அல்லது இன்னும் கிடைக்கவில்லையே என்று கவலைப்படாமல், தகுதியான மாற்று ஆவணத்துடன் ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள்.