தன்னைத் தானே ‘தாய்மாமன்’ என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் முதலமைச்சரின் ஆட்சியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளதாக அதிமுக தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 9 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் ஒன்பது நாட்கள் ஆகியும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத் தம்பதியின் 8 வயது பெண் குழந்தை மாயமாகி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்று மேடைகளில் உறுதியளித்த முதலமைச்சர், இந்த விவகாரங்களில் மௌனம் காப்பது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு நடவடிக்கை எடுப்பதில் காட்டும் தீவிரத்தைச் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் காட்ட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு மாயமான சிறுமிகளைக் கண்டுபிடித்துப் பெற்றோர் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சிறுமிகள் மாயமான சம்பவங்கள் குறித்துப் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.
காணாமல் போன சிறுமிகளைக் கண்டுபிடிக்கக் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.