தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் 17 வயது மகள் ஸ்ரீநிதி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் அடுத்தடுத்து மூன்று முறை கடுமையான வலிப்பு (Fits) ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பள்ளி நிர்வாகம் மாணவிக்கு உடனடியாக உரிய முதலுதவி வழங்காமலும், மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சேர்க்காமலும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பள்ளியில் மாணவிக்கு வலிப்பு ஏற்பட்ட போது அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைக்கவோ அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ முற்படவில்லை எனத் தெரிகிறது. மிகவும் தாமதமாக, மாலை 3:30 மணியளவிலேயே மாணவியை ஒரு ஆட்டோ மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஸ்ரீநிதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததே இந்த மரணத்திற்கு முதன்மைக் காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை துரைசாமி கண்ணீர் மல்கப் பேசுகையில், “என் மகளுக்கு வலிப்பு வந்தபோது அங்கிருந்த வேதியியல் (Chemistry) ஆசிரியர் உட்பட யாரும் அவளைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை; நான் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்ததால் தான் என் பிள்ளையைத் தொடாமல் அலட்சியப்படுத்தினார்களா?” என சாதிய பாகுபாடு காரணமா என்ற அடுக்கடுக்கான புகாரை எழுப்பியுள்ளார். இந்த அலட்சியமே தன் 17 வயது மகளின் மரணத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி, உறவினர்களுடன் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோர் நீதிகேட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.
மாணவியின் மரணத்திற்கு காரணமான பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மீது உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடந்துகொண்டிருந்த போதே, உயிரிழந்த ஸ்ரீநிதியின் தோழி ஒருவரும் அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெற்றோரிடமும் உறவினர்களிடமும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகப் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாகச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.