Posted in

கூட்டணியை தக்க வைக்க திமுக முயற்சிக்கவில்லை: விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விசிக தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த போது தங்களைச் சாதியவாத மற்றும் மதவாத சக்திகள் வசைபாடியதாகத் தெரிவித்தார். இருப்பினும் கொள்கை மற்றும் கோட்பாடுகளில் தாங்கள் உறுதியாக இருந்ததாலேயே இன்று அமைச்சரவையில் இடம்பெறும் சூழல் கனிந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கட்சிகளை அரவணைத்துத் தக்கவைக்க வேண்டும் என்பதில் திமுக தரப்பிலிருந்து போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சித்தார். தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் தரப்பில் கூட்டணி குறித்தான பேச்சுகள் வெளிவந்த போதிலும், அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்துத் திமுக முன்கூட்டியே சிந்தித்துச் செயல்பட்டிருக்க வேண்டும் என்றார். மேலும் தேர்தல் அரசியலில் சிறிய கட்சி பெரிய கட்சி என்பதைவிட வெற்றியே முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசியல் சூழலில் பாமக மற்றும் பாஜக இடம்பெற்றுள்ள அணியுடன் எக்காலத்திலும் இணங்கப் போவதில்லை என்ற தங்களது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். விசிக அத்தகைய கூட்டணியில் இருக்காது என்பதைத் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

திருமாவளவனின் இந்த வெளிப்படையான விமர்சனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. வரவிருக்கும் அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணிக் கணக்கீடுகள் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளை விவாதித்து வருகின்றனர்.