Posted in

தமிழகத்தில் ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (CRIDP) கீழ் ரூ.6,513 கோடி மதிப்பில் 2,221 சாலைப் பணிகளை மேற்கொள்ளத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமார் 4,126.39 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலைகள் மற்றும் அதற்கு மேல் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக ரூ.767.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 188 இடங்களில் இருவழிச் சாலைகளை விரிவுபடுத்த ரூ.1,196.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 419 இடங்களில் ஒருவழிச் சாலைகளை இடைநிலைச் சாலைகளாக மாற்றுவதற்காக ரூ.1,763.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, 5 இடங்களில் புறவழிச்சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக ரூ.283.05 கோடியும், 21 இடங்களில் நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.149.43 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அதிகபட்சமாக 588 சாலைப் பாதுகாப்புப் பணிகளும், 515 இடங்களில் சாலைகளின் தரத்தை மேம்படுத்தும் வேலைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

சாலைப் பணிகளைத் விரைந்து தொடங்கி தரமான முறையில் முடிக்கத் தொடர்புடைய துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயண நேரம் மிச்சமாகும் எனவும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.