Posted in

300 திருக்குறள் ஒப்பிக்கும் 500 மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசு: தமிழக அரசு அரசாணை

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ள அரசாணை நிலை எண் 206-ன் படி, 300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தலா 5,000 ரூபாய் பரிசு வழங்கத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் இளம் வயதிலேயே தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் இந்த முத்துக்குறள் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 5, 2026 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் முதல் 500 மாணவர்களுக்குப் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை 1,330 திருக்குறள்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்குத் தலா 15,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படும் நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக இந்தப் புதிய திட்டம் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காகப் பரிசுத்தொகை, மாவட்ட அளவிலான திறனாய்வுப் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கும் விழா செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 47 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த அறிவிப்புக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

2026-2027-ஆம் நிதியாண்டில் திருக்குறள் முற்றோதல் திட்ட நிதியிலிருந்தும், 2027-2028-ஆம் நிதியாண்டு முதல் தொடர் செலவினமாகவும் நிதி ஒதுக்கி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது. விரைவில் 38 மாவட்டங்களிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டுத் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.