Posted in

அமெரிக்காவை வெறுப்பவர் நவி பிள்ளை: நோபல் அமைதிப் பரிசு பெற்றவரை விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப்

2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையரும் தென்னாப்பிரிக்க நீதிபதியுமான நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சட்டங்களைப் பாதுகாத்தல் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்வை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நவி பிள்ளை அமெரிக்காவை வெறுப்பவர் என்றும், நோபல் கமிட்டி தனது கண்ணியத்தை இழந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்ட சமூக வலைதளப் பதிவை ட்ரம்ப் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேசிய நவி பிள்ளை, “நீங்கள் இன்னும் கொஞ்சம் பலமாக க்ளாப் செய்தால், நான் இந்த விருதை ட்ரம்புடன் பகிர்ந்து கொள்வேன்” என நகைச்சுவையாகப் பேசியிருந்தார். இதற்குக் கோபமடைந்த ட்ரம்ப், தாம் உலகின் பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதாகவும், அமெரிக்க அதிபரான தனக்கே இந்த அமைதிப் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நோபல் கமிட்டியின் இந்த முடிவு நோர்வே நாட்டிற்கு மாறாத கறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்தக் கருத்துகள் மற்றும் சமூக வலைதளப் பகிர்வுகள் சர்வதேச அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. மனித உரிமைகளுக்காகப் போராடிய ஒரு மூத்த நீதிபதியை அதிபர் ட்ரம்ப் இவ்வாறாக விமர்சிப்பது முறையல்ல எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

தற்போது நோபல் பரிசு அறிவிப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெள்ளை மாளிகை மற்றும் சர்வதேச அமைப்புகளின் அடுத்தகட்ட அறிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.