Posted in

அநீதியின் அரசன்; ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டொனால்ட் டிரம்பின் 23 காரட் தங்க சிலை திறப்பு!

பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆடையற்ற 23 காரட் தங்க முலாம் பூசப்பட்ட சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ‘தி ஆரஞ்சு பிளேக்’ (The Orange Plague) அல்லது ‘அநீதியின் அரசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஜென்ஸ் கல்சியோட் (Jens Galschiøt) என்பவரால் உருவாக்கப்பட்டது. சுமார் 2.5 மீட்டர் உயரமுள்ள இந்த சிற்பம், அமெரிக்க அதிபர் டிரம்பின் சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவு கொள்கைகளை விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையில், ஒரு சிறிய மனிதனின் தோள்களில் டிரம்ப் ஆடையின்றி அமர்ந்திருப்பது போலவும், அவரது கையில் கோல்ஃப் மட்டை மற்றும் உலக உருண்டை வடிவ பந்து இருப்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், “நான் ஒரு மனிதனின் முதுகில் அமர்ந்திருக்கிறேன், அவன் எனது சுமையால் மூழ்கிக் கொண்டிருக்கிறான்; இறங்குவதைத் தவிர அவனுக்கு உதவ நான் எதையும் செய்வேன்” என்ற வாசகமும் இதன் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை டிரம்ப் தடுப்பதை விமர்சிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதன் கலைஞர் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினரான பெர் கிளாசென் (Per Clausen) அழைப்பின் பேரில் இந்தச் சிலை ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கியப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்பு குறித்து பேசிய பெர் கிளாசென், இத்தகைய அரசியல் விமர்சனச் சிலைகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மென்மையான மனம் கொண்டவர்களுக்கு உலக அரங்கில் இடமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். எனினும், இந்தச் சிலை காட்சிப்படுத்தப்பட்டது குறித்து அதிபர் டிரம்ப் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் அக்டோபர் 8 வியாழக்கிழமை வரை காட்சிக்கு வைக்கப்படும் இந்த சிலை, அதன்பின்னர் துருக்கியில் நடைபெறவுள்ள சிஓபி31 (COP31) ஐ.நா பருவநிலை மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. முன்னதாக பிரேசில் நாட்டில் நடைபெற்ற சிஓபி30 மாநாடு மற்றும் ஜெர்மனியின் முனிச் நகரிலும் இந்த சிலை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.