அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கேட்டி சகாரியா (Katie Zacharia), தனது வழக்கறிஞர் உரிமம் குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
முந்தைய செயலாளர் கரோலின் லீவிட் பதவி விலகியதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் விமர்சகரான கேட்டி சகாரியா புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், சகாரியாவை ஒரு வழக்கறிஞர் என அறிமுகப்படுத்தினார். அப்போது செய்தியாளர்கள் எந்த மாநிலத்தில் வழக்கறிஞர் தேர்வில் (Bar exam) தேர்ச்சி பெற்றீர்கள் என்று கேட்டபோது, “நான் சீனாவுக்குச் சென்றபோது” என்று கேட்டி சகாரியா அளித்த பதில் பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
சீனாவில் அந்த நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே வழக்கறிஞராகப் பயிற்சி பெற உரிமம் வழங்கப்படும் என்பதால், கேட்டி சகாரியாவின் இந்தப் பதில் சட்ட நிபுணர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற மாநிலங்களின் பார் கவுன்சிலிலும் இவரது பெயர் பதிவாகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகப் பந்தய இணையதளமான பாலிமார்க்கெட்டில் (Polymarket), கேட்டி சகாரியா எத்தனை நாட்கள் இந்தப் பதவியில் நீடிப்பார் என்பது குறித்துப் பயனர்கள் பந்தயம் கட்டத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை நிர்வாகம், சகாரியா சட்டப்படிப்பு முடித்தவர் என்றும், சர்வதேசப் பரிவர்த்தனை சட்டப் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளது.