தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் திருச்சிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாபெரும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி மாவட்டத் தவெக மகளிரணி இணையமைப்பாளர் நிவேதா, ஊடகங்களுக்கு நெகிழ்ச்சியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். “எங்களின் உழைப்பிற்கு மதிப்பளித்து, மிகக் கடுமையான பணிச் சூழல்களுக்கு மத்தியிலும் திருச்சி கிழக்குத் தொகுதிக்கு நேரில் வந்து நன்றி தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய்க்கு திருச்சி மாவட்டப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய நிவேதா, திமுக மற்றும் அதிமுக ஆகிய பாரம்பரியக் கட்சிகள் தங்களின் பண பலத்தைப் பயன்படுத்தித் தவெக நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டினார். “திமுக, அதிமுகவில் உள்ள பண வசதி படைத்தவர்கள் உள்ளே வருவதைப் பார்த்து எங்களது கட்சி நிர்வாகிகள் சிலர் பயப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஒரு சாதாரண எளிய மக்களைத்தான் நான் வேட்பாளராக நிறுத்துவேன் என்று எங்கள் தளபதி விஜய் ஏற்கனவே திட்டவட்டமாக வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, தவெக-வினர் யாரும் எதற்கும் பயப்படத் தேவையில்லை; தளபதி யாரையும் கைவிட மாட்டார், நாம் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து அவருக்காகத் தொடர்ந்து களப்பணியாற்றுவோம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் தனது திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை அண்மையில் ராஜினாமா செய்தது தங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்துள்ளதாக நிவேதா ஒப்புக்கொண்டார். “திருச்சி கிழக்குத் தொகுதியைத் தனது மற்றொரு கண் என்று தளபதி வர்ணித்திருந்தார். அவர் இங்கு வின் பண்ணிட்டுப் பின்னாடி ராஜினாமா செய்தது எங்களுக்குள் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால், தொகுதி மக்கள் யாரும் வேட்பாளர் யார் என்று பார்த்து வாக்களிக்கவில்லை; தளபதி விஜய்யின் முகத்தைப் பார்த்து மட்டும்தான் ஓட்டு போட்டார்கள். அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் கண்டிப்பாக ஏதோ ஒரு நல்ல வலுவான காரணம் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று நெகிழ்ந்தார்.
இறுதியாக, தமிழக அரசியல் களம் இனி தவெக-வின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே இருக்கும் என்று அவர் சூளுரைத்தார். “அமைச்சர் ராஜ்மோகன் மேடையில் குறிப்பிட்டதைப் போல, இனி தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லாத ஒரு மாபெரும் அரசியல் சூழலைத் தளபதி விஜய் உருவாக்குவார். அவர் மக்களை வெறும் வாக்காளர்களாகப் பார்க்காமல், தன் குடும்பத்தில் ஒருத்தராகப் பார்க்கிறார். தனக்கான சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு, மக்களுக்காக வாழ வந்துள்ள இந்தத் தங்கத் தளபதி இருக்கும் வரை தமிழ்நாட்டிற்குப் பயமில்லை. இந்த திருச்சி மலைக்கோட்டை இனி எங்களது தளபதியின் கோட்டையாக மாறிவிட்டது என்பதற்கு இந்த மக்கள் கூட்டமே சாட்சி” என்று நிவேதா ஆக்ரோஷமாகப் பேசி முடித்தார்.