பிரிட்டனின் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளில் இன்று (நவம்பர் 17) காலை 15 சென்டிமீட்டர் வரை கனமழையுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்படும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் (Met Office) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலை நேரப் பயண நெரிசலின் போது சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் மின்சாரம் மற்றும் செல்போன் சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்காட்லாந்தின் துல்லோக் பிரிட்ஜ் (Tulloch Bridge) பகுதியில் இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையாக மைனஸ் 7.7 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதனைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் மழை மேகங்கள் குளிர்ந்த காற்றுடன் இணைவதால், கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 400 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள இடங்களில் 5 முதல் 15 சென்டிமீட்டர் வரையிலும், தாழ்வான பகுதிகளில் 1 முதல் 5 சென்டிமீட்டர் வரையிலும் பனி படியக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
பனிப்பொழிவு மற்றும் பனிப்படலம் காரணமாகச் சாலைகளில் வாகனங்களை இயக்குவது ஆபத்தானதாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் கம்பளி ஆடைகள், உணவு, தண்ணீர், டார்ச் லைட், பனி நீக்கும் கருவி மற்றும் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் காரில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் வடமேற்கு, வடகிழக்கு மற்றும் யார்க்ஷயர் பகுதிகளுக்குப் பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) வியாழக்கிழமை காலை வரை மஞ்சள் நிறக் குளிர் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று காலைப் பொழுதிற்குப் பிறகு தெற்கிலிருந்து வீசும் வெப்பக் காற்றால் பனிப்பொழிவு படிப்படியாக மழையாக மாறும் என்றும், வார இறுதியில் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.