Posted in

ரஷ்யா மீது 900 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல்: பதிலடித் தாக்குதலுக்கு கீவ் எச்சரிக்கை!

ரஷ்யப் பகுதிகளின் மீது உக்ரைன் ஒரே இரவில் சுமார் 900 ட்ரோன்களை ஏவித் தீவிரத் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள பெரிய எாிபொருள் சேமிப்புக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் பல பிராந்தியங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மற்றும் அஸோவ் கடல் பகுதி ஆகியவற்றின் மீது பறந்து வந்த உக்ரைனிய ட்ரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்ததாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூற்றுப்படி, திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மாஸ்கோ பிராந்தியத்தை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ட்ரோன்கள் மூலம் ரஷ்ய நிலப்பரப்பில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் தொடர்ந்து இலக்கு வைத்து வருகிறது.

அதேவேளையில், ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பாரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார். செவ்வாய்க்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்ட செலென்ஸ்கி, “ரஷ்யா ஒரு பிரம்மாண்ட தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக நமக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன, அதற்குத் தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க தயாரிப்பான ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைத் தட்டுப்பாடு காரணமாக, ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் உக்ரைன் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது.

இதனிடையே, உக்ரைனின் தெற்கு நகரமான ஜாபோரிஜியாவில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீதான பாலம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கருங்கடல் பகுதியில் உக்ரைனிய துறைமுகங்களின் கப்பல் போக்குவரத்தை முடக்கும் நோக்கில் ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனின் எதிர்நடவடிக்கை காலக்கெடு மற்றும் உடனடிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.